தூத்துக்குடி,டிசம்பர்-12-
தூத்துக்குடி: நகரின் மையப்பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் ஆன்மீகச் சிறப்பு மிக்க தெப்பக்குளத்தைச் சீரமைக்கும் பணியில் திடீரெனச் சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பணி அண்ணா பல்கலைக்கழகத் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆய்வுக்குப் பின் பழமை மாறாமல் முறைப்படி சீரமைக்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் மையப்பகுதியில், சுந்தரவிநாயகர் கோவில், முத்தாரம்மன் கோவில் உள்ளிட்ட ஆன்மீகத் தளங்கள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள 150 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம், பல ஆண்டுகளாகச் சீரமைப்பு இன்றி இருந்தது. தற்போது, மாநகராட்சி சார்பில் ₹75 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கிரானைட் நடைபாதைகள், இருக்கைகள் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வந்ததுடன், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களைப் பராமரிக்க அசுத்த நீர் வெளியேற்றப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், புதன்கிழமை இரவு தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் சுமார் 6 அடி அளவிற்கு திடீரெனக் கீழே இறங்கி விரிசல் ஏற்பட்டது.
இதனால், தெப்பக்குளச் சுவர்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டதோடு, அருகிலிருந்த இரண்டு மின் மாற்றிகளும் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்த மேயர் ஜெகன் பெரியசாமி உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெப்பக்குளம் சுவர்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதால், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் ஆய்வுக்குப் பின், இந்தத் தெப்பக்குளம் அதன் தொன்மையான தோற்றம் மாறாமல், முறையாகச் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி மற்றும் மின்வாரிய அதிகாரிகள், அத்துடன் பகுதிச் செயலாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.