தூத்துக்குடி சிதம்பர நகரைச் சேர்ந்த வழக்கறிஞரும், ரியல் எஸ்டேட் அதிபருமான உலகநாதன் (54) என்பவரை, பணத் தகராறு காரணமாக ஒரு கும்பல் பட்டப்பகலில் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, சிதம்பர நகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் மந்திரம் மகன் உலகநாதன் (54), வழக்கறிஞரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகின்றார். இவர் ஒர் இடம் தொடர்பாக, தமிழ்ச்சாலை ரோட்டில் அமைந்துள்ள பிரபல புக் சென்டர் வைத்து நடத்தி வருபவரும், திமுக பிரமுகருமான மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் மகன் சரவணன் (44), என்பவரிடம் 20 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
அந்த நிலம் கிரயம் ஆகாததால், ரூ.6 லட்சத்தை திருப்பிக் கொடுத்த உலகநாதன், மீதித் தொகைக்கு இரண்டு காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாததால் அந்த காசோலைகள் திரும்பியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், வழக்கறிஞரின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரைப் பறிமுதல் செய்துள்ளார். ஆனால், அந்தக் காருக்கு முறையாகத் தவணை (EMI) கட்டப்படாததால், வங்கி அதிகாரிகள் சரவணனிடமிருந்து காரைக் கைப்பற்றினர்.
தன்னுடைய பணமும் வராமல், பறித்த காரும் கைவிட்டுப் போன கோபத்தில் இருந்த சரவணன் மற்றும் அவரது தம்பி பாலமுருகன் ஆகியோர், நேற்று காலை தனசேகரன் நகர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த உலகநாதனை வழிமறித்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.கடத்திச் செல்லப்பட்ட உலகநாதனை ஒரு வங்கிக்கு அழைத்துச் சென்று, காரின் தவணைத் தொகையைக் கட்டச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவரது பெற்றோரைத் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து உலகநாதனின் குடும்பத்தினர் உடனடியாக சிப்காட் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.புகாரைப் பெற்ற மூன்றே மணி நேரத்தில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை வழிமறித்து வழக்கறிஞர் உலகநாதனைப் பத்திரமாக மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட சரவணன், அவரது தம்பி பாலமுருகன் மற்றும் கார் ஓட்டுநர் ஜெராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரக் கடத்தல் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
