தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வடக்கு மண்டல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கூட்டத்தில் பேசிய அவர், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தன் அனுபவங்களை எடுத்துரைத்த அவர், “283 கிளைகளில் வெறும் 13 கிளைத் தலைவர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்த நிலை இருந்தது. அதனை மாற்றுவதற்காக ஒவ்வொரு கிளையிலும் நேரடியாக சென்று பொதுமக்களையும் கிளை நிர்வாகிகளையும் சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசினேன்.
அதன் பயனாக ஒரு மாதத்திற்குள் 165 செயல்திறன் கொண்ட கிளைத் தலைவர்கள் உருவானார்கள்” என்றார்.
மேலும், “ஒவ்வொரு கிளையிலும் உள்ள குறை, நிறைகளை கண்டறிந்து அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னால் அதன் பலன் மிகப்பெரியதாக இருக்கும். மாநில தலைவர் யார், எம்எல்ஏ யார் என்பதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் கிளையில் மக்களுக்காக நீங்கள் செயல்பட்டால் அதற்கான பிரதிபலிப்பு நிச்சயம் கிடைக்கும்” என்று அவர் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மண்டல் தலைவர் சுதா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணை தலைவர் சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், வடக்கு மண்டல் பிரபாரி சரவணன், ஜெயகிருஷ்ணன், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் செந்தில், OBC அணி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜ், OBC மாவட்ட செயலாளர் குரு, வடக்கு மண்டல் பொதுச் செயலாளர் சங்கர் கணேஷ், அன்புராஜ் உள்ளிட்ட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
