தூத்துக்குடியில் ஜன. 24-ல் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்கில், வரும் ஜனவரி 24-ஆம் தேதி (சனிக்கிழமை) குடும்ப அட்டை தொடர்பான குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜனவரி மாதத்திற்கான இந்தச் சிறப்பு முகாம் அனைத்து வட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். மேலும், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம். குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய அட்டைகளுக்கு முகாமிலேயே அதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர பொது விநியோகத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகள் தொடர்பான புகார்களையும் பொதுமக்கள் மனுவாக அளித்துப் பயன்பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply