உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பதவி–தேர்தலின்றி நியமனம்! திராவிட மாடலின் வரலாற்றுச் சட்டம்!

நகர்ப்புறம் முதல் கிராமம் வரை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின்றி நேரடி உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் (திருத்தச்) சட்டமுன்வடிவுகளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

தொடர்ந்து அவர் சட்ட பேரவையில் பேசுகையில்;- மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற திராவிட மாடல் அரசு, இன்றைக்கு நாம் முக்கியத்துவம் வாய்ந்த சட்டமுன்வடிவுகளை அறிமுகப்படுத்தப் போகிறோம்.
இதன் மூலம் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புப் பெறுவார்கள். அவர்களது ஊர்களிலேயே மரியாதையும் உரிமையும் வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டமுன்வடிவம் தாக்கல் செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தோம். இப்போது அந்தச் சட்டமுன்வடிவுகளை முன்மொழிவதை நான் எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் – சட்டமுன்வடிவம்:-
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டமுன்வடிவங்கள் அறிமுகமாக உள்ளன. தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் (கிராம ஊராட்சி முதல் மாநகராட்சி வரை) அவர்கள் நேரடி தேர்தல் இல்லாமல், நியமன முறையில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த சட்ட முன்வடிவங்கள், அவர்களுக்கு சம வாய்ப்பு மற்றும் சிறப்புரிமைகள் வழங்குவதையும், சமூகநீதியை நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டவை. இதற்காக, 1994-ம் ஆண்டு ஊராட்சிகள் சட்டமும், 1998-ம் ஆண்டு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டமும் திருத்தப்பட்டு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் தங்களின் குரலை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், நிர்வாகத்தில் வல்லமை பெற்ற தலைவர்களாக திகழ்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரத்தில் பங்கேற்பவர்களாக உயர்த்துவது திராவிட இயக்கத்தின் நோக்கம் என்பதை வலியுறுத்தி, இந்த சட்டமுன்வடிவங்களை அறிமுகப்படுத்துவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

13,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உறுப்பினராக வாய்ப்பு– மாற்றுத்திறனாளிகளுக்கான விரிவான பிரதிநிதித்துவம் சட்டத் திருத்தம் மூலம், ‘தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவர்’’ என்றார். இந்த மசோதாக்கள் விரைவில், சட்டப்பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த மாற்றத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகளின் குரல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிரொலிக்கும். என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply