“வான்கோழி மயிலாக முடியுமா?” – விஜய்யை வறுத்தெடுத்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன்!

தூத்துக்குடி டூவிபுரத்தில் அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி, அலுவலகத்தைத் திறந்து வைத்த அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லபாண்டியன், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் நடிகர் விஜய் மற்றும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“சினிமா வேறு.. அரசியல் வேறு!”

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், “திரைப்படத்தில் வசனம் எழுதிக் கொடுப்பதைப் பேசி கைதட்டல் வாங்கலாம். அது சினிமாவுக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும், அரசியலுக்குச் செட் ஆகாது. யானை வரும்போது மணி சத்தம் கேட்டால் மக்கள் வெளியே வருவது போல, விஜய் ஒரு நடிகர் என்பதால் அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடுகிறது. அவர் எப்போதும் வெளியே வராதவர், இப்போது வருவதால் மக்கள் பார்க்கிறார்களே தவிர, அது வாக்குகளாக மாறாது,” என்றார்.

தொடர்ந்து காட்டமாகப் பேசிய அவர், “வான்கோழி ஒருபோதும் மயிலாக முடியாது. படத்தில் பத்து பேரை எட்டி உதைப்பார் என்பதால் அவர் காலைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். கூட்டம் கூடுவதால் மட்டுமே யாரும் எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ மாறிவிட முடியாது,” என விஜய்யை கடுமையாக ‘ரோஸ்ட்’ செய்தார். மேலும், கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் போய்ப் பார்க்காமல், அவர்களை வரவழைத்து விஜய் ஆறுதல் கூறியது கேலிக்கூத்தானது என்றும் சாடினார்.

திமுக அரசு மீது தாக்குதல்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்த அவர், “முதலமைச்சர் தன் மகனுக்குப் பட்டம் சூட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். கல்விக் கடன் ரத்து என வாக்குறுதி அளித்துவிட்டு இன்றுவரை நிறைவேற்றவில்லை. மக்களின் வரிப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட தூண்டில் பாலத்தால் மீனவர்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்,” எனக் குறிப்பிட்டார்.

“2026-ல் எடப்பாடியார் தான் முதல்வர்!”

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்ட செல்லபாண்டியன், “எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளபடி, அதிமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம், அனைவருக்கும் வீடு மற்றும் கல்விக் கடன் ரத்து போன்ற திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதி,” எனத் தெறிக்கவிட்டார்.

Leave a Reply