தமிழர்களின் அடையாளமாகவும், தேசிய மரமாகவும் கருதப்படும் பனை மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் 5 கோடிக்கும் மேல் இருந்துள்ளன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு கோடிக்கும் குறைவாகக் குறைந்துள்ளதால், கடற்கரை மண் அரிப்பு மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலை மாற்றவும், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ‘ஒரு கோடி பனை விதைகள்’ நடும் இலக்கை நோக்கித் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் பணியில், இதுவரை சுமார் 76 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு, வளர்ந்து வரும் பனை வடலிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரை, கடம்பா குளம், கடற்கரைப் பகுதிகள் என நீர்நிலைகளின் கரைகள் உடையாமல் இருக்க இந்த விதைகள் அரணாக விளங்குகின்றன. நடவுப் பணியுடன் நின்றுவிடாமல், பள்ளி-கல்லூரி மாணவர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் இளைஞர்களிடையே பனையின் மருத்துவக் குணங்கள் மற்றும் பொருளாதாரப் பயன்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்களையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 2025-2026 நிதியாண்டில் தமிழக வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 5,00,000 பனை விதைகள் நடப்பட்டன. மதர் சமூக சேவை நிறுவனத்தின் இந்த மகத்தான சேவையைப் பாராட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் கென்னடி அவர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழும், பரிசும் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், லீடு டிரஸ்ட் இயக்குனர் பானுமதி உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மதர் நிறுவனத்தின் இந்தத் தொடர் முயற்சியால், தமிழக மக்களிடையே பனை பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
