நாகர்கோவில் ஆணையர் பணியிட மாற்றம்;புதிய ஆணையர் யார்?- மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா, தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தமிழக அரசு துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக அரசு பணியில் மூன்றாண்டுகள் ஒரே பணியிடத்தில் பணியாற்றுவோர் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். மேலும் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் போன்ற காலங்களில் அனைத்து நிலைகளிலும் இடமாற்றங்கள் நிகழும். இந்த நிலையில் தமிழக அரசு துறை செயலர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர்கள் என 55 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அந்த வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நிஷாந்த் கிருஷ்ணா, இனி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றுவார். நாகர்கோவிலில் அவரது பணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

நாகர்கோவில் மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது, திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது, தூய்மைப் பணிகளை மேம்படுத்துவது போன்ற சவாலான பணிகளைச் சந்திக்கவிருக்கும் அடுத்த ஆணையர் யார் என்பதை அறிய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். புதிய ஆணையர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply