கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக, போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கியூஆர் (QR) கோடு அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சி ‘சங்கமம்’ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்புமுனை போதை நோய் நலப்பணி மற்றும் போதைநோய் நலப்பணிகளின் கூட்டமைப்பு இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.
இந்த புதுமையான விழிப்புணர்வு கண்காட்சி, வரும் ஜூன் 25ஆம் தேதி ஆசாரிப்பள்ளம் சாலையில் அமைந்துள்ள திருப்புமுனை போதை நோய் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை அதன் நிர்வாகிகள் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இக்கண்காட்சியில், பார்வையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து, போதைப் பொருட்களின் தீமைகள், அவற்றின் பாதிப்புகள், போதைக்கு அடிமையாவதிலிருந்து மீள்வதற்கான வழிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த தகவல்களை பெற முடியும்.இந்த கண்காட்சியின் மூலம் போதையில் சிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான முன்னேற்பாடாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.