தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் மரணம்: 4 நாள் போராட்டத்திற்குப் பின் உடல் ஒப்படைப்பு!

தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி என்பவரின் மகன் மனோகரன் (33), கடந்த 14 வருடங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பணியின்போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மனோகரனின் மரணத்திற்கு நியாயம் கோரி, அவரது குடும்பத்தினர் மற்றும் பண்டாரம்பட்டி பொதுமக்கள் நான்கு நாட்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், உரிய இழப்பீடு, நிவாரணம் மற்றும் மனோகரனின் மனைவிக்கு அரசு வேலை போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிலையில், நான்கு நாள் காத்திருப்புப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று துணை காவல் கண்காணிப்பாளர் (ASP) தலைமையில், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மற்றும் பண்டாரம்பட்டி ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்த மனோகரனின் உடல் பெற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply