தூத்துக்குடி அனல்மின் நிலையத் ஒப்பந்த தொழிலாளர் மரணம்: வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!

தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (33) என்பவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த நிலையில், பணியின்போதே எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மனோகரன் உயிரிழந்து மூன்று நாட்களாகியும், அவரது மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை எனக் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நியாயமான விசாரணை கோரியும், மனோகரனின் குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு, பிரபல வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சமூக ஆர்வலர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மனோகரனின் குடும்பத்தினர் மற்றும் பண்டாரம்பட்டி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகளாக, உயிரிழந்த மனோகரனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஒப்பந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு குறித்த அம்சங்களும் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் மனோகரனின் குடும்பத்திற்கு விரைந்து நியாயம் வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க உரிய பாதுகாப்பு வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply