தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடியில் பிரம்மாண்ட விரிவாக்கம்:தொழில்,சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய சகாப்தம்;விரைவில் திறப்பு விழா!

தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் நகரமான தூத்துக்குடி, தனது போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ரூ. 380 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தயாராகி வருகிறது. இது தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது தென் மாவட்டங்களின் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

தூத்துக்குடி விமான நிலையம் 1992-ல் வாகைகுளத்தில் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய ரக விமானங்களுக்கான 1,350 மீட்டர் ஓடுதளத்துடன் செயல்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் விமான சேவைகள் நிலையற்றதாக இருந்தன. 2006-ல் ஏர்டெகான் சேவை தொடங்கிய பின்னர், தூத்துக்குடியின் விமானப் போக்குவரத்து மீண்டும் புத்துயிர் பெற்றது. தற்போது, இரண்டு தனியார் நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருவுக்கு தினசரி 9 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. கடந்த மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மே மாதம் மட்டும் சுமார் 13,000 பேர் தூத்துக்குடியில் இருந்து வெளியூர்களுக்குப் பயணித்துள்ளனர், அதேவேளையில் 15,000 பேர் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.

பயணிகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 381 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 1,350 மீட்டர் நீள ஓடுதளம் 3,000 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் 5 பெரிய விமானங்களை நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், விமான நிலையம் இந்த மாதம் இறுதியில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விரிவாக்கத்தின் மூலம், ஏ-321 ரக ஏர்பஸ் போன்ற பெரிய ரக விமானங்களும் தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். இது தூத்துக்குடியை சர்வதேச விமானப் போக்குவரத்து வரைபடத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்க உதவும். மேலும், தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் இது பெரும் உந்துசக்தியாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply