திருநெல்வேலி காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் ஸ்ரீ காந்திமதி அம்பாள் சன்னதியில் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்களுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் காந்திமதி அம்பாளை தரிசித்தனர்.
ஜூலை 21 (நான்காம் நாள்): நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஜூலை 27: மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணிக்குள் திருக்கோயிலில் அம்மன் சன்னதி முன் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.