Site icon thoothukudipeople.com

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் விபத்து: 3 பயிற்சி மருத்துவர்கள் பரிதாப பலி

தூத்துக்குடி,நவம்பர்-19-

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாகப் பணிபுரிந்த ஐந்து பேர் இன்று அதிகாலை விபத்தில் சிக்கினர்.இதில் 3 பயிற்சி மருத்துவர்கள் பரிதாபமாக இறந்தனர்.மேலும் 2 பயிற்சி மருத்துவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சாருபன் (23) , புதுக்கோட்டையைச் சேர்ந்த ராகுல் ஜெபஸ்டியான் (23), திருப்பத்தூரைச் சேர்ந்த முகிலன் (23), தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்டி குமார் (23) மற்றும் சரண் (23) ஆகிய ஐந்து பேரும் அதிகாலை 3 மணியளவில் புதிய துறைமுகம் கடற்கரைக்குக் காரில் சென்றனர்.காரை சாருபன் ஒட்டி சென்றார்.

இந்த நிலையில் பீச் சாலையில் கார் சென்றபோது, பலத்த மழையின் காரணமாக சாலை சரியாகத் தெரியாததால், கார் நிலைதடுமாறி அருகிலிருந்த வேப்ப மரத்தின் மீது பயங்கரமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் ஐந்து பேரும் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.
அந்த வழியாக சென்ற மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சாருபன், ராகுல் ஜெபஸ்டியான், முகிலன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கிறிஸ்டி குமார் மற்றும் சரண் ஆகியோர் உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு டவுன் ஏஎஸ்பி மதன், தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இந்தச் செய்தி அறிந்து, அரசு மருத்துவமனையில் ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சோகத்துடன் குவிந்துள்ளனர். விபத்து குறித்துத் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் மருத்துவர்கள் உயிரிழந்த இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version