பழனிசாமி-விஜய் இரகசியப் பேச்சு? ‘ஜனவரியில் முடிவு!’ –  கூட்டணியை நோக்கி நகர்கிறாரா விஜய்? -அரசியல் திருப்பம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய்யை கடந்த அக்.6-ம் தேதி மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தால் ஏற்பட்ட 41 பேர் உயிரிழப்பிற்காக ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தால் மனமுடைந்துள்ள விஜய், கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதைத் தவிர்த்து, கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் உதவி வழங்குவதற்காக பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க முடியாமல் தவிப்பதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரூர் சம்பவம் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோவில், மறைமுகமாக திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தக் கூட்ட நெரிசலுக்கு அரசின் கவனக்குறைவே காரணம் என பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விஜய்யிடம் ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், 2026 சட்டமன்றத் தேர்தலை இணைந்து சந்திக்குமாறு கூட்டணி அழைப்பையும் விடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நம் இருவருக்கும் பொது எதிரி திமுக. அதை 2026 தேர்தலில் இணைந்து வீழ்த்துவோம்” என்றும் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இந்தக் கூட்டணி அழைப்புக்கு விஜய் தரப்பு எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தனித்துப் போட்டியிடுவது சிரமம் என்றும், அனுபவம் வாய்ந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் விஜய்க்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் விஜய்யைத் தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல் வெளியானது.

இந்தச் சூழலில், பழனிசாமியின் அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணித் தொடர்பான இறுதி முடிவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என்று இரு தரப்பும் பேசி முடித்துள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply