தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றிய தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், பாஜக தொண்டர்கள் மீது போடப்படும் பொய் வழக்குகள் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளின் போது அவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளையும், சட்டப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இளம் வழக்கறிஞர்களைக் கட்சியுடன் இணைத்து தேசபற்று மற்றும் சேவை மனப்பான்மை கொண்ட சட்டப் போராளிகளாக உருவாக்க வேண்டும் என்றும், ஊழல் மற்றும் தேசிய விரோதச் செயல்களுக்கு எதிராகச் சட்ட வழியில் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வழக்கறிஞர் பிரிவு என்பது வெறும் பதவிக்காக அல்லாமல், தேசம் மற்றும் ஜனநாயகத்தைக் காக்கும் ஒரு சட்ட சேவை அமைப்பாகச் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள் குறித்துப் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது நமது முதன்மைக் கடமை என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்டப் பொருளாளர் சண்முக சுந்தரம், வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சீனிவாசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் சின்னத்தம்பி பாண்டியன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மண்டல் தலைவர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

