கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்முறையைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், தமிழ்ச்சாலையில் உள்ள விவிடி சிக்னல் அருகில் மகளிர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தேன்மொழி, “இன்றைய இளைஞர்கள் மது, போதைப்பொருள் போன்றவற்றில் சிக்குவதால்தான் இதுபோன்ற அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன. இளைஞர்கள் நல்ல குடிமக்களாக உருவாக வேண்டும். சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், இதுபோன்ற குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையேற்றார். மகளிர் அணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், மாநில செயற்குழு உறுப்பினர் தக்ஷனா, வடக்கு மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ஜமுனா, பிரச்சாரப் பிரிவு மாவட்டச் செயலாளர் அனுசுயா ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட துணைத்தலைவர்கள், பொதுச் செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்படப் பல கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.