“நல்லது நடந்தால் திமுக சொந்தம் கொண்டாடுகிறது;இல்லையெனில் மத்திய அரசை குறை சொல்கிறது; சரத்குமார் விமர்சனம்..!

தூத்துக்குடி,டிசம்பர்-27

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர். சரத்குமார் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


திமுக அரசு மீது விமர்சனம்: இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர். சரத்குமார், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். “திராவிட மாடல் அரசு வாயால் வடை சுடும் அரசு அல்ல” என்று முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாம் உண்மையைச் சொன்னாலும், அதை பொய் என்றுதான் சொல்வார்கள். சமீபத்தில் பல்நோக்கு மருத்துவமனை விவகாரத்தில் கூட அவர்கள் உண்மையை மறைத்து இப்படித்தான் நடந்து கொண்டார்கள்” என்று விமர்சித்தார்.

100 நாள் வேலைத் திட்டம் குறித்து விளக்கம்: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுகவினர் கூறிவரும் புகார் குறித்துப் பேசிய அவர், “மத்திய அரசு இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மேலும், இதில் 40 சதவீத பங்களிப்பை மாநில அரசு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம்,” என்றார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக இருந்தால் அதைத் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்வதும், உடன்பாடு இல்லையென்றால் மத்திய அரசைக் குறை சொல்வதையுமே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply