தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு, தெப்பக்குளம் பகுதியில், நீண்ட நெடுங்காலமாகப் பொதுமக்கள் ஈமச் சடங்குகளுக்குத் தண்ணீர் எடுப்பதற்காகப் பயன்பாட்டில் இருந்து வந்த பொதுக் கிணறு தற்போது மாநகராட்சி நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு நீரின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்தக் கிணறு மூடப்பட்டதற்கு மாற்றாக, மாநகராட்சி நிர்வாகம் வரதராஜபுரத்தில் உள்ள சைவ வேளாளர் திருமண மண்டபம் மற்றும் ராசி திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு அருகில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டது. இருப்பினும், அந்த மாற்று ஏற்பாடுகளும் தற்போது கைவிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நீரின்றித் தவித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது.பொதுமக்களின் இந்த அவசரத் தேவையைக் கருத்தில்கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தெப்பக்குளம் அருகில் உள்ள அந்தக் கிணற்றை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி தலைமையில், மாநகராட்சி ஆணையரிடம் நேரில் மனு வழங்கப்பட்டது.இந்த மனு அளிப்பின்போது ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, மாவட்டச் செயலாளர் உஷா தேவி, மகளிர் அணி மாவட்டத் துணைத்தலைவர் லதா, கிழக்கு மண்டலப் பொதுச் செயலாளர் சண்முக சுந்தரம், லட்சுமி வேல்கனி, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவர் பாலாஜி உட்பட கிழக்கு மண்டல நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

