மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிப் பண்டிகைக்கு அனைத்துப் பெண்களுக்கும் அற்புதமான புடவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஏற்கெனவே, அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும், தாலிக்கு தங்கம் திட்டத்துடன் பெண்களுக்குப் பட்டுப்புடவையும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தற்போது தீபாவளிக்கும் புடவை வழங்கப்படும் என அவர் அறிவித்திருப்பது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணியைப் பின்பற்றி பெண்களின் வாக்கு வங்கியை ஈர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, குறிப்பாகப் பெண்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றார். குடும்பப் பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட இலவசப் பொருட்களை வழங்கியதுடன், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவித் திட்டம் போன்ற பல்வேறு
திட்டங்களையும் செயல்படுத்தினார். இந்தத் திட்டங்கள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தன.
தற்போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பாணியைப் பின்பற்றி, பெண்களுக்கு இலவசப் புடவை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு, மீண்டும் பெண்களின் ஆதரவைப் பெறத் திட்டமிடுவது அரசியல் நோக்கர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் பெண்களின் வாக்குகள் முக்கியப் பங்கை வகிக்கும் என்பதால், இந்த அறிவிப்பு அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகத்தில் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46