சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்பி.,கனிமொழிக்கு தனி அலுவலக அறை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழிக்கு புதிதாக தனி அலுவலக அறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கனிமொழியை நேரில் அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தார்.

முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் திமுக முதன்மைச் செயலாளரான கே.என்.நேருவுக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் அவரை அழைத்துச் சென்று அமர வைத்தார். இந்த வரிசையில் தற்போது கனிமொழிஎம்பிக்கும் பிரத்யேக அலுவலக அறை வழங்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்பி ஏற்கனவே திமுகவின் டெல்லி முகமாகச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்திலும், மத்திய அரசு தொடர்பான விவகாரங்களிலும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில், பாஜக உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களும் கனிமொழிக்கு உரிய மரியாதையை அளித்து வருகின்றனர். இந்த தனி அலுவலக ஒதுக்கீடு, அவரது கட்சிப் பணிகளுக்கும், தேசிய அரசியல் களத்தில் அவரது பிரதிநிதித்துவத்திற்கும் மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply