தூத்துக்குடி,டிசம்பர்-12-
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, தெய்வீகத் தென்றல் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் சண்முகபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பொதுமக்களுக்குத் தையல் மிஷின் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், “திரைப்படத் துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், தனக்கென்று தனித் திறமையுடன் நடித்து இன்று வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார். அவரது நடிப்பும், ஆன்மீகத்தில் அவர் காட்டும் தனிப்பட்ட ஈடுபாடும் தான் அவரை இன்றும் உயரிய இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது. ரசிகர்கள் வெறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல், அவருடைய பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நற்பணி மன்றமாகத் தொடர்ந்து செயல்படுவது ரஜினிக்கு மேலும் பெருமை சேர்க்கும் செயல்,” என்று பாராட்டிப் பேசினார். அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி விழா அனைவருக்கும் வழங்க, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் உட்படப் பல தி.மு.க. மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.