தமிழ்நாடு அனைத்து காப்பகங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை தூத்துக்குடியில் நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, காப்பகங்களின் வளர்ச்சி மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

காப்பகங்களுக்கான உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து வழங்கிய தமிழக அரசின் துரித நடவடிக்கைக்காகவும், முதியோர்களுக்காகத் தொடங்கப்பட்ட ‘அன்புசோலை’ (பகல்நேர தங்கும் மையம்) திட்டத்திற்காகவும் அமைச்சரிடம் கூட்டமைப்பினர் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர். இந்தியாவிலேயே ஆதரவற்றோருக்கான சேவையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்வதை அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.அண்டை மாநிலமான கேரளாவில் செயல்படுவது போல, தமிழகத்திலும் ‘Orphanage Control Board’ உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆராய்ச்சி அறிக்கையைச் சமர்ப்பித்தனர். மேலும், தொண்டு நிறுவனங்களுக்கென தனி வாரியம் அமைக்கவும் வலியுறுத்தினர்.
சமூக விரோதிகளின் தேவையற்ற வதந்திகளால், பல ஆண்டுகளாகச் சேவை செய்து வரும் நிர்வாகிகள் பாதிக்கப்படுவதைத் தடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரினர்.
இடவசதி மற்றும் பொருளாதார நெருக்கடியால் காப்பகங்கள் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவற்றைத் தக்கவைக்க உதவி கோரினர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொண்டு நிறுவனங்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, காப்பகங்கள் சுதந்திரமாகச் செயல்பட வலுவான கட்டமைப்பை உருவாக்கித் தர வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின் போது கூட்டமைப்பின் நிர்வாகிகளான மெர்வின் ஜோசஸ், புஷ்பராஜ், ஜூபின் பேபி, பாலசந்தர், ராஜராஜேஸ்வரி, லதா கலைவாணன், ஜெபசிங், அருண் ஆபிரகாம் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர்கள் ராஜப்பா ஜெபக்குமார், மாலினி, குமரன்,ஜெபசெலினா ஆகியோர் உடனிருந்தனர்.
கோரிக்கைகளைப் பொறுமையுடன் கேட்டறிந்த அமைச்சர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
