தூத்துகுடி,டிசம்பர்-2,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் வசிக்கும் பொது மக்களிடமிருந்து 2025-26 ஆம் நிதியாண்டிற்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணத்தை தாமதமின்றிச் செலுத்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுள்ள வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைக் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 172, 174 மற்றும் 242 இன் படி, 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான கிராம ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏற்கெனவே 31.05.2025-க்குள் செலுத்தியிருக்க வேண்டும். மேற்படி நாளதுவரை செலுத்தாதவர்கள், 15.12.2025-க்குள் தங்களது ஊராட்சி மன்ற அலுவலகத்திலோ அல்லது கணினி மையங்களிலோ தங்களின் வரி விதிப்பு எண்ணைச் சரிபார்த்து, தவறாது இணையவழியில் (https://vptax.tnrd.tn.gov.in/) செலுத்தி, செலுத்தப்பட்டமைக்குரிய கணினிவழி இரசீதுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறே குடிநீர்க் கட்டணத்தையும் மாதாந்திரம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற அளவில் நிலுவையின்றிச் செலுத்திட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.