தூத்துக்குடி,டிசம்பர்-6-
மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிஎம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் முக்குலத்தோர் சார்பாக இசக்கிராஜா தேவர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிஎம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத்தலைவர் இசக்கிராஜா தேவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து மையமான மேலமடை சந்திப்பில், ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விடிவெள்ளி வீரமங்கை வேலுநாச்சியார் பெயரைச் சூட்டுவதாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாகவும், ஒட்டுமொத்த முக்குலத்தோர் சொந்தங்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளி நம் அன்னை வேலுநாச்சியார். 1780-லேயே வெள்ளையர்களை எதிர்த்து, பெண் படைகளைத் திரட்டி, மருது சகோதரர்கள் துணையோடு தாக்குதல் நடத்தி சிவகங்கை மண்ணை மீட்டெடுத்தவர். ஜான்சி ராணிக்கு வெகுகாலம் முன்பே, வாள் ஏந்திப் போரிட்டு ஆங்கிலேயரை அலறவிட்ட சரித்திர நாயகி அவர். மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் இந்த முக்கியச் சாலைக்கு, சிவகங்கை சீமையின் ராணி வேலுநாச்சியார் பெயரைச் சூட்டியது மிகவும் பொருத்தமானதும், போற்றுதலுக்குரியதுமாகும். இது வேலுநாச்சியார் தியாகத்திற்குச் செய்யப்படும் மரியாதை மட்டுமல்ல, இந்த மண்ணின் மைந்தர்களாகிய முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாகும். சரித்திரத் தலைவர்களை நினைவுகூரும் வகையிலும், தென் மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தொிவித்துக்கொள்வதோடு இது போன்ற நல்ல செயல்களை செய்வதற்கு பாராட்டுகளை தொிவித்துக்கொள்கிறோம் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.