கோவில்பட்டி,டிசம்பர்-11,
கோவில்பட்டியில் மூதாட்டி ஒருவர் தவறவிட்ட நகையை திரும்ப கொடுத்த ரேஷன் கடை ஊழியர்..நகையை பெற்று கொண்ட மூதாட்டி மகிழ்ச்சியடைந்தார்.
கோவில்பட்டி ஜோதி நகரில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்ற ராஜீவ் நகரைச் சேர்ந்த லட்சுமி (65) என்ற மூதாட்டி, சுமார் 5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி மற்றும் வளையல்கள் வைத்திருந்த பையை தவறுதலாக விட்டுச் சென்றுள்ளார். நகை காணாமல் போனதை அறிந்த அவர், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரேஷன் கடை ஊழியரான சீனிபாண்டியன் (55), கடையை அடைக்கும்போது மேஜைக்கு அடியில் கிடந்த நகைப்பையைக் கண்டெடுத்து, நேர்மையுடன் கடையில் வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர், மூதாட்டி லட்சுமியையும், ஊழியர் சீனிபாண்டியனையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன் முன்னிலையில், ஊழியர் அந்த நகைகளை மூதாட்டியிடம் ஒப்படைத்தார். தான் கண்டெடுத்த நகைகளை நேர்மையுடன் ஒப்படைத்த கடை ஊழியர் சீனிபாண்டியனை போலீசாரும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.