தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், நகை பாலிஷ் போடுவது போல் நடித்து, கவரிங் நகைகளைக் கொடுத்து மோசடி செய்யும் ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உழைப்பில் வாங்கிய நகைகளை இழக்காமல் இருக்க மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ராஜபுஷ்பம் (65) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத இருவர் வெள்ளி கொலுசுக்கு பாலிஷ் போடுவதைப் பார்த்துள்ளார். இதை நம்பி, தனது வீட்டிலிருந்த 33 கிராம் தங்க நகையை பாலிஷ் போட்டுத் தருமாறு அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் சாமர்த்தியமாக பாலிஷ் போடுவதுபோல் நடித்து, ஒரு பார்சலைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். ராஜபுஷ்பம் அதனைப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் கவரிங் நகை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த மோசடியில் ஈடுபட்ட பீகார் மாநிலம், சுபால் மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ்குமார் (31) மற்றும் ஷர்வான்குமார் (21) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு பிடிக்கப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுடன் மேலும் சிலரும் திருநெல்வேலியில் அறை எடுத்துத் தங்கியிருந்து, தென் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சூரஜ்குமார், ஷர்வான்குமார் ஆகியோரை கைது செய்ததுடன், திருநெல்வேலியில் தங்கியிருந்த இவர்களது கூட்டாளிகளான அமர்குமார் (26), சோனு குமார் (18), அஜய்குமார் (21), மற்றும் மணிஷ்குமார் (20) ஆகியோரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.