கட்டாயம் தமிழ் பெயர் பலகை: தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி!

தூத்துக்குடி.,டிசம்பர்-19,

தூத்துக்குடி: தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் டிசம்பர் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை “ஆட்சி மொழிச் சட்ட வாரம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்வாக, தூத்துக்குடியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரத் தலங்களில் பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுத வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் இப்பேரணி தொடங்கியது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை, தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆட்சி மொழி தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஏந்திச் சென்றனர். பழைய நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, உதவி ஆட்சியர் அலுவலகம் வழியாகச் சென்று கடற்கரையைச் சென்றடைந்தது.
பேரணியின் போது, சாலை ஓரங்களில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சென்று, பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவர்களிடையே தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து துணை இயக்குனர் இளங்கோ உரையாற்றினார். பேரணியின் இறுதியில், தமிழ் மொழியை வளர்க்கவும், ஆட்சி மொழியைப் பாதுகாக்கவும் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, மாரிமுத்து, ஜெகஜீவன் ராம், திருக்குறள் பேரவை அன்பழகன், அய்யனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply