2017ஆம் ஆண்டு போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்ட தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லாததால், சந்தேகத்தின் பலனை அவருக்குச் சாதகமாக்கி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
.2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், போரூர் அடுத்த மாங்காடு பகுதியில் வசித்த 6 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனார். பின்னர் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த பிறகு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் தன் தாயைக் கொலை செய்த வழக்கில் அவர் மீண்டும் கைதானார். ஆனால், தாயின் கொலை வழக்கில் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால், தஷ்வந்த் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சிறுமி பாலியல் கொலை வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை ரத்து செய்து, தஷ்வந்த்தை விடுவிக்க உத்தரவிட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லாமை: குற்றவாளியை இந்த வழக்கில் முழுமையாக இணைக்கப் போதுமான வலுவான தடயவியல் அல்லது பிற ஆதாரங்கள் இல்லை.: சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர், குற்றவாளியான தஷ்வந்த் தான் என்பதை உறுதியாக நிறுவ முடியவில்லை.சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளின் ஆய்வு முடிவுகள், குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்த்துடன் முழுமையாக ஒத்துப் போகவில்லை.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “போதிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் எழுப்பப்பட்ட சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட தஷ்வந்துக்குச் சாதகமாக்கி விடுதலை செய்யப்படுகிறது” என்று நீதிபதி விக்ரம்நாத் அமர்வு அறிவித்தது.