தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் முள்புதர்கள் மண்டிக் கிடப்பதாலும், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாலும் மாணவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டிடங்கள், மாணவர் விடுதிகள், நடைபாதைகள் மற்றும் திறந்த வெளிகள் அனைத்திலும் முள்புதர்கள் அகற்றப்படாமல் நீண்ட காலமா அப்படியே இருக்கிறது தினமும் வகுப்புகளுக்கும் விடுதிகளுக்கும் செல்லும் மாணவர்கள் உயிர் பயத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில் மாணவ, மாணவிகள் கடும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பலமுறை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது நிர்வாகத்தின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்
உயர்கல்வி நிறுவனமாக விளங்கும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கல்வி கற்க வரும் வளாகத்தில் பாதுகாப்பு என்பது முதன்மையானதாக இருக்க வேண்டிய நிலையில், விஷ ஜந்துக்கள் நடமாடும் சூழலலில் படிப்பது மாணவர்களின் உயிரை ஆபத்தில் தள்ளும் செயலாகும் என தெரிவித்துள்ளார். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கான முழுப் பொறுப்பும் பல்கலைக்கழக நிர்வாகத்தையே சாரும் என்றும் எச்சரித்தூள்ளார்.
எனவே உடனடியாக முள்புதர்களை முழுமையாக அகற்றி, வளாகம் முழுவதும் சுத்தம் செய்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மாணவர் பாதுகாப்புக்காக நிரந்தர பராமரிப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும் என கூறினார்.
இந்த கோரிக்கைகளை நிர்வாகம் அலட்சியப்படுத்தினால், மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி பாஜக சார்பில் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவித்துள்ளார்.

