Site icon thoothukudipeople.com

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்: தூத்துக்குடி தொழில்முனைவோருக்கு 50 சதவீத மானியம் – ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். 2025-2026 ஆம் நிதியாண்டில் கிராமப்புறப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

2025-2026- ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறு அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியத்தில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள தொழில் முனைவோர் 250 நாட்டுக் கோழிகள் வளர்த்திட குறைந்தபட்சம் 625 சதுரஅடி நிலம் இருத்தல் வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிக்கு 250 நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கான விலையில் 50 சதவீதம் கோழிக் கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள், கோழித் தீவனங்கள் ஆகியவற்றிக்கான மொத்த விலையில் ரூ.1,65625/- மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் 30% தாழ்த்தப்பட்ட வகுப்பினர்/பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் பயனாளியோ அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்தவரோ முந்தைய ஆண்டுகளுக்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கும் பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல், 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம்/வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23, 2023-24 மற்றும் 2024-25ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவை அளிக்கவேண்டும்.

தகுதி வாய்ந்த திட்டம் செயல்படுத்திட விருப்பம் உள்ள பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி 25.06.2025-க்குள் விண்ணப்பம் அளித்திட மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version