Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் பத்திாிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை வழங்க வேண்டும்:மாநகராட்சி கூட்டத்தில் வக்கீல் மந்திரமூர்த்தி கோாிக்கை!

தூத்துக்குடி மாநகராட்சியின் மாதாந்திர சாதாரணக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி எதிர்கட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார்.

மழையிலும் வெயிலிலும் மக்களுக்காக உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கடந்த அதிமுக ஆட்சியில் இதற்காக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பின் இக்கோரிக்கை கிடப்பில் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இது குறித்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும், கடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் உறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். எனவே, காலதாமதமின்றி பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை வழங்க அவர் கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி சார்பில் நடத்த வேண்டும் என மந்திரமூர்த்தி கேட்டுக்கொண்டார். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, அருகிலுள்ள ராஜாஜி பூங்கா வழியாக மாற்றுப் பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version