தூத்துக்குடி,டிசம்பர்-9-
தமிழ்நாடு அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளவாறு உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளர்ச்சி பணிகள் செயல்படுத்தவும் மாநகராட்சிகளில் பகுதி சபா குழுக்கள் அமைக்க தெரிவிக்கப்பட்டதன் பேரில், தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டு ஒன்றுக்கு ஐந்து பகுதி சபா குழுக்கள் வீதம் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கும் 300 பகுதி சபா குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு காலாண்டுக்கான பகுதி சபா கூட்டமானது வருகின்ற 10.12.2025 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் மாண்புமிகு மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதிவாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.