Site icon thoothukudipeople.com

பொதுமக்கள் கவனத்திற்கு: இடைத்தரகர்களுக்கு ‘நோ’ சொல்லுங்கள்! எஸ்பி ஆல்பர்ட்ஜான் எச்சரிக்கை!

தூத்துக்குடி,நவம்பர்-20:

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் மனு கூட்டத்திற்கு, ஒரு பெண்ணிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட முயன்ற இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.11.2025) நடைபெற்ற குறைதீர்க்கும் மனு கூட்டத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண், கரூரைச் சேர்ந்த ஒரு நபருடன் வந்து மனு அளித்தார். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் கரூர் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் (49) என்பதும், அவர் ‘கரூர் Anti Corruption Dynamic Party’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவர் அப்பெண்ணின் குடும்பப் பிரச்சனையை இந்தக் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் தீர்த்து வைப்பதாகக் கூறி, அப்பெண்ணிடம் ₹5,000 பணம் பெற்றுக் கொண்டு வந்ததும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், வின்சென்ட் மீது ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் மோசடி, திருட்டு உள்ளிட்ட 3 வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் குறைகளை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்து மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இதுபோன்று தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இடைத்தரகர்களாகச் செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

Exit mobile version