Site icon thoothukudipeople.com

விஜய் காரை மறித்த பெண் நிர்வாகி…அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?

தூத்துக்குடி,டிசம்பர்-25,

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட நிர்வாகிகளுக்கான புதிய பட்டியலைத் தலைவர் விஜய் அண்மையில் வெளியிட்டார். இதில், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், அந்தப் பதவி சாமுவேல்ராஜுக்கு வழங்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்தார். இது தொடர்பாக சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்ட அஜிதா, தலைவர் விஜய்யின் காரையும் மறிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகிகளின் சமாதானத்திற்குப் பின் அங்கிருந்து கலைந்து சென்றார்.
இந்தச் சூழலில், தூத்துக்குடி திரும்பிய அஜிதா ஆக்னல் நேற்று மாலை அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சிக்கு முன்பாக அவர் வெளியிட்ட தகவலில், “இறுதி மூச்சு உள்ளவரை என் தாய்க்கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும், எம் தலைவர் தளபதி விஜய்யோடும் மட்டும்தான் எனது அரசியல் பயணம் தொடரும்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் தவெக பெண் நிர்வாகி எடுத்துள்ள இந்த விபரீத முடிவு, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version