தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா தள்ளிவைப்பு!

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடியில் பிரம்மாண்டமான மின்சார கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில், ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில், தமிழக அரசுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் பரப்பளவில் இந்தத் தொழிற்சாலை அமையப்பெற்றுள்ளது.

கடந்த 2024 பிப்ரவரி 25 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம், முதல் கட்டமாக ரூ.1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் இரண்டு பணிமனைகள், இரண்டு கிடங்குகள் மற்றும் கார் பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை உள்ளடக்கி முடிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் உள்ள வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையிலிருந்து கொண்டுவரப்படும் உதிரி பாகங்களைக் கொண்டு, தூத்துக்குடி ஆலையில் ஆண்டுக்கு 50,000 VF 6 மற்றும் VF 7 ரக மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையின் முதல் கட்ட உற்பத்திப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வரும் 31-ம் தேதி காலை 8 மணிக்கு திறப்பு விழா நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், காணொலி வாயிலாக தொழிற்சாலையைத் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் விரைவில் தூத்துக்குடிக்கு நேரில் வந்து ஆலையைத் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


உங்களிடம் செய்தி இருக்கிறதா? எங்களிடம் சொல்லுங்கள்!

உங்கள் பகுதியில் நடந்த சம்பவங்கள், சமூகப் பிரச்சினைகள், அல்லது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான தகவல்கள் என எதுவாக இருந்தாலும், எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அனைத்துத் தரப்பு மக்களின் குரலையும் எங்கள் தூத்துக்குடி மக்கள் ஆன்லைன் இதழ் மூலம் கொண்டு சேர்க்க நாங்கள் காத்திருக்கிறோம்.

செய்திகளைப் பகிர அல்லது தகவல்களைத் தெரிவிக்க, எங்கள் ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்:

ஆசிரியர்: பா. செந்தில் குமார் தொடர்புக்கு: 9655550896,0461-7960026

Leave a Reply