Site icon thoothukudipeople.com

2026 சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணிநேர தீவிர வாகன சோதனை – எஸ்.பி. மதன் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தீவிரப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் அனைத்து எல்லைகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபடுமாறு அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் முகாமிட்டு, சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் அனுமதியின்றி பணம் கொண்டு செல்வதைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புப் பணிகளை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி சுதீர் வசவப்பபுரம் சோதனைச் சாவடியிலும், சாத்தான்குளம் உட்கோட்ட டி.எஸ்.பி ஆவுடையப்பன் பெரியதாழை சோதனைச் சாவடியிலும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட டி.எஸ்.பி நிரேஷ் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வாகன சோதனையின் போது காவல்துறையினர் கட்டாயம் ஒளிரும் ஜாக்கெட்டுகளை (Reflective Jackets) அணிந்திருக்க வேண்டும் என்றும், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களைத் துல்லியமாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாவட்டத்திற்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களின் விவரங்களையும் முறையாகப் பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். தேர்தல் நேரத்தில் எவ்விதக் குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தற்போது பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகளை நிலைநாட்ட இந்த நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version