Site icon thoothukudipeople.com

மனைவி இறந்த 30-வது நாள்: நகைகளுக்காக மாமியாரை மிதித்துக் கொன்ற மருமகன்! தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் நகைப் பேராசையினால் பெற்ற தாய்க்கு நிகரான மாமியாரை, மருமகனே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,அத்திமரப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாப்பா (75). இவரது நான்காவது மகள் சுப்புராணியை, முத்தையாபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் லிங்கதுரை (43) என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுப்புராணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மனைவி இறந்த சோகம் மறைவதற்குள், நேற்று இரவு மதுபோதையில் மாமியார் வீட்டிற்குச் சென்ற லிங்கதுரை, தனது மனைவி அணிந்திருந்த நகைகளைத் தருமாறு கேட்டுத் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த லிங்கதுரை முதியவர் என்றும் பாராமல் பாப்பாவைக் கீழே தள்ளி, காலால் அவரது கழுத்தை மிதித்து நெரித்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட பாப்பாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், தலைமறைவாக இருந்த லிங்கதுரையை அதிரடியாகக் கைது செய்தார். மனைவியை இழந்த ஒரு மாதத்திலேயே, நகைகளுக்காக மாமியாரைக் கொலை செய்த மருமகனின் செயல் அப்பகுதி மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version