தூத்துக்குடியில் இன்று பாஜக மாவட்ட சார்பில் ‘நம்ம ஊர் மோடி பொங்கல்’ விழா மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது.

தமிழர் பாரம்பரியத்தையும், கலாசார மரபுகளையும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
பாஜக மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவில் ஆண்கள் பாரம்பரிய உடையான வேஷ்டி–சட்டை அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் பங்கேற்று, விழா மேடையை பாரம்பரிய களமாக மாற்றினர். புதிதாக தயாரிக்கப்பட்ட மண்பானைகளில் வண்ண கோலங்கள் இட்டு, சர்க்கரை பொங்கல் பொங்க வைக்கப்பட்டது.
அப்போது பெண்கள் “பொங்கலோ பொங்கல்” என குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிகழ்வின் போது, எல்லா மக்களும் அனைத்து செல்வங்களும் ஆரோக்கியமும் பெற்று வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றும், இந்திய பாரம்பரியமும் அதன் பயன்பாடுகளும் எப்போதும் நாமும் நமது சந்ததியினரும் பேணிக் காக்க வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டு, ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
தமிழர் பாரம்பரிய விழாவை அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி சமூக ஒற்றுமையின் அடையாளமாக கொண்டாடிய இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
