Site icon thoothukudipeople.com

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் விடிய விடிய கள ஆய்வு – 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சாத்தான்குளம் வட்டத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கட்டாரிமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, சவேரியார்புரம் மற்றும் அரசூர் பகுதிகளில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், மற்றும் பிடாநேரியில் சொட்டுநீர் பாசன முறையிலான வாழை நடவு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, எழுவரைமுக்கி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள் மற்றும் முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், கால்நடை வளர்ப்போருக்கான தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பினைத் தொடங்கி வைத்த அவர், பெரியதாழை ஊராட்சியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள மீன்பிடி இறங்கு தள மேம்பாட்டுப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மாவட்டத்தின் கடைக்கோடி மக்களுக்கும் அரசின் மருத்துவ மற்றும் அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

ஆய்வின் நிறைவாக, சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து சுமார் 950 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், தகுதியுள்ள 60 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், சாத்தான்குளம் வட்டத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் விரைந்து மக்களைச் சென்றடைய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Exit mobile version