இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஹோலி கிராஸ் ஆங்கில இந்தியப் பள்ளியில் பயிலும் எல்கேஜி மாணவி அன்விதா சிவக்குமார் (5 வயது), ஐபிஎன் அகாடமி சார்பாகக் கலந்துகொண்டு தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். 500 மீட்டர் பந்தயத்தில் 6 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தையும், 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாம் இடத்தையும் பிடித்து அன்விதா சாதனை படைத்துள்ளார்.
தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ஊக்கமும், ஆக்கமுமே பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. அதே போல் தமிழக அரசு இளைய தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களை உலக அளவில் ஜொலிக்கச் செய்யவும் எடுக்கும் முயற்சிகளுக்கு மாணவி அன்விதாவின் சாதனை சிறந்த எடுத்துக்காட்டாகும். இத்தகைய பெருமைமிக்கச் சாதனையைப் படைத்த மாணவி அன்விதாவைச் சென்னைக்கு வரவழைத்த மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பசுமை வழிச் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அன்விதாவிற்கு ஒரு பவுன் தங்க மோதிரம் பரிசாக வழங்கி கௌரவித்தார்.
மேலும், தனது திறமையின் வாயிலாக அன்விதா வருங்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும், வெற்றிகள் குவிய வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவியிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் உடனிருந்தார்.
தூத்துக்குடி செய்திகள் இனி உங்கள் கைகளில்!
தூத்துக்குடியில் நடக்கும் அனைத்து முக்கியச் செய்திகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியானால், 965550896 என்ற எண்ணில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்!உங்கள் பகுதிச் செய்திகள் அல்லது நீங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்கள் இருந்தாலும், இந்த எண்ணில் எங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.