பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க திமுக – காங்கிரஸ் உறவு தொடர வேண்டும்: சி.எஸ். முரளிதரன் வலியுறுத்தல்.!

தமிழகத்தில் அதிமுக – பாஜகவின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி எஸ் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் பொங்கல் பண்டிகை முன்னிட்டு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பானை மற்றும் வேஷ்டி சேலை வழங்கி பேசுகையில்;-  தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ், திமுக உடன் கூட்டணியை தொடர வேண்டும். அதற்கு காலம் தாழ்த்தாமல் விரைவில் திமுக உடன் கூட்டணியை நாம் உறுதி செய்ய வேண்டும். 
அப்போதுதான் தமிழகத்தில் மீண்டும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்போடு அதிமுகவில் பிரிந்த தலைவர்களை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு  டி.டி.வி தினகரனை என். டி. ஏ கூட்டணியில் இணைத்துள்ளார்கள். 
வரும் 23ம் தேதி தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார்கள். 
இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நண்பனாக குறிப்பாக ராகுல்காந்தியோடு தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல நட்புறவு மூலம் மத்தியில் ஆண்டு கொண்டிருக்கின்ற மோடி அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதனால் தான் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிகளை  ஒன்றிய அரசு வழங்காமல் திமுக ஆட்சிக்கு மிகுந்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு ஒன்றிய அரசு செயல்பட்டு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் நிறுத்தி வருகிறது. 
இருந்தாலும் தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் நிர்வாக திறமையால் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக இன்றைக்கு உருவெடுத்துள்ளார். 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று  இந்தியா கூட்டணியில் ஓங்கி ஒலித்த குரலாக தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய குரல் இருந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். அதற்கு திமுக ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றினால் மட்டுமே சாத்தியமாகும் என்ற எண்ணத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் எப்படியாவது பாஜக காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு எடப்பாடி பழனிச்சாமியை கையில் எடுத்து இன்றைக்கு எந்த ரூபத்திலாவது தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் அதன் மூலம் தமிழகத்தில் பாஜக கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள். 
அதை முறியடிக்க வேண்டும் என்றால் திமுக - காங்கிரஸ் கூட்டணி காலத்தின் கட்டாயம். கூட்டணி தொடர வேண்டும். ஏனெனில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது தமிழகத்தில் உங்களால் நுழைய முடியுமா என்று பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பினார். 
இந்தக் கூட்டணி தொடர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜகவை நுழையவிடாமல் பாஜகவின் முகத்தில் கரியை பூச முடியும். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமில்லை என்பதையும் நாம் நிரூபிக்க முடியும். இதைத்தான் தமிழக மக்கள் முழுமையாக எதிர்பார்க்கிறார்கள். பாஜக, அதிமுக கூட்டணியை தமிழகத்தில் ஓட ஓட விரட்ட வேண்டும் என்று சொன்னால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் விரும்புகிறார்கள். 
அப்போதுதான் தமிழக மக்களுக்கு மீண்டும் 2026 சிறப்பான ஆட்சியின் மூலம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்து 2029ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக தமிழகத்தில் 40க்கும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும். அப்போதுதான் மத்தியிலும் மோடி தலைமையிலான 2029ல் ஒன்றிய அரசை வீழ்த்த முடியும். என்று பேசினாா்.

Leave a Reply