தூத்துக்குடி,டிசம்பர்:19-
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவரின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம், சாமிநத்தம் மற்றும் ராசாவின்கோவில் பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சாமிநத்தம் மற்றும் ராசாவின்கோவில் பகுதிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” எனும் மக்கள் சந்திப்பு மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இக்கூட்டம் நடத்தப்பட்டது. ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமை தாங்கி, பூத் எண் 57 மற்றும் 58-ல் உள்ள வாக்காளர் பட்டியல்களைச் சரிபார்த்து, விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய ஒன்றிய செயலாளர் இளையராஜா, தமிழக முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். குறிப்பாக, விடியல் பயணம், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் தகுதியுள்ள பெண்களுக்கு வழங்கப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டம் உள்ளிட்ட அரசின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார். வரும் 20 நாட்களுக்குத் தீவிர களப்பணியில் ஈடுபட்டு, திமுகவின் வாக்கு வங்கி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் எத்தனை அணிகள் களம் இறங்கினாலும் திமுகவே முதன்மையான இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் பேசினார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

