Site icon thoothukudipeople.com

மீண்டும் ஸ்டாலின்.. மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் 20வது வார்டு திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

தூத்துக்குடி,டிசம்பர்-21,

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போல்பேட்டை 20-வது வார்டில் நடைபெற்றது. போல்பேட்டை கிழக்கு பகுதியில் உள்ள பிரமுகர் கணேசன் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, வட்டச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான இரவீந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி நாராயணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, வார்டு முழுவதும் விடுபட்ட வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், தமிழக அரசின் மகளிருக்கான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை போன்ற சாதனைகளைப் பொதுமக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி ஏழாவது முறையாக அமையவும், மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாகத் தொடர்ச்சியாக முதலமைச்சராகப் பதவியேற்கவும் தொண்டர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் “வேடந்தாங்கல் பறவைகள்” போன்ற மற்ற கட்சிகளுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும், அடுத்த 20 நாட்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் பணியை முழுமையாகச் செய்ய வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாக முகவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜான் ஸ்டாலின் நன்றி கூறினார்.

Exit mobile version