சென்னை:நாகாலாந்து ஆளுநரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான இல.கணேசன் (80), தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக காலமானார். இவரின் மறைவு, தமிழக பாஜகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இல.கணேசன் கடந்து வந்த பாதை: தஞ்சாவூரில் 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இலக்கு மிராகவன் – அலமேலு தம்பதிக்கு 7-வது மகனாக பிறந்தவர் இல. கணேசன். சிறுவயதில் தந்தையை இழந்த இல.கணேசன், சகோதரர்களின் அரணைப்பில் வளர்ந்தார். அவர்கள், ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டில் இருந்ததால், தனது 5 வயதிலே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டார்.
ஆர்எஸ்எஸ் மீதான பற்று காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அரசு பணியில் இருந்து கொண்டே ஆர்எஸ்எஸ் பணிகளிலும் கவனம் செலுத்தினார். 1970-ம் ஆண்டு அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர செயல்பாட்டாளராக பொது வாழ்வில் இணைந்தார்.
ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நாகர்கோவில் பொறுப்பாளராக இருந்த இல. கணேசன், பின்னர், நெல்லை, மதுரை மாவட்ட பொறுப்பாளராக வும், அதனை தொடர்ந்து மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இதையடுத்து மாநில இணை அமைப்பாளர் என ஆர்எஸ்எஸ்-ல் பயணித்த கணேசன், 1991-ல் பாஜகவில் இணைந்து, தேசிய செயற்குழு உறுப்பினரானார். இதையடுத்து, விரைவிலேயே அமைப்பு பொதுச் செயலாளரானார்.பாஜகவுக்கு தமிழ் முகம் கொடுத்தவர் என்ற பெருமை இல.கணேசனுக்கு உண்டு. தமிழகத்தில் கடைகோடிக்கும் பாஜகவை கொண்டு சேர்த்தவர். எழுத்தார்வம் கொண்ட இல.கணேசன், பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்புவகித்தார்.
‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பையும் நடத்தி வந்தார். பாஜகவில் இவர் ஆற்றிய பணி, இவரை பாஜக தேசிய செயலாளர், தேசிய துணை தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளில் அமர வைத்தது. குஜராத்தில் மோடியும், தமிழகத்தில் இல.கணேசனும் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் ஆர்எஸ்எஸ்-ல் அடுத்தடுத்த நிலை நோக்கி நகர்ந்தவர்கள்.
நெருக்கடிநிலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதோடு பாடல்களும் எழுதினார். அப்போதும் கூட தனிநபர் தாக்குதல், கண்ணியக்குறைவான பேச்சைத் தவிர்த்தார். கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அமைப்புக்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் நட்போடு பழகுபவர் கணேசன். திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்களான கே.டி.கே.தங்கமணி, நல்லகண்ணு, சங்கரய்யா மீதும் அளவு கடந்த மரியாதை வைத்திருப்பவர்.
2009, 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனாலும், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இல.கணேசனை தேர்வு செய்து பாஜக அழகு பார்த்தது.பாஜகவின் நீண்ட கால உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசன், 2021-ல் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை கவனித்து வந்த நிலையில், 2023-ல் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு தற்போது வரை ஆளுநர் பதவியில் இருந்து வந்தார்.
தலைவர்கள் அஞ்சலி: இல.கணேசனின் மறைவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவரின் உடல் இன்று மாலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இல.கணேசனின் மறைவு குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசன் அவர்களின் மறைவால் வேதனை அடைந்தேன். நாட்டின் சேவைக்கும், தேசத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உண்மையான தேசியவாதியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் கடுமையாக உழைத்தார். தமிழ் கலாச்சாரத்தின் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவுச் செய்தி அறிந்து வேதனையடைந்தேன். தனது நீண்டகால பொது வாழ்க்கையில் மக்கள் நலனுக்காக அவர் பணியாற்றினார். தமிழ்நாடு மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கு அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.