‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்’ காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகில் அமைத்துள்ள காமராஜரின் திருவுருவ வெண்கலச் சிலைக்கு, மக்கள் நல உரிமை அமைப்பின் நிறுவனரும், பிரபல வழக்கறிஞருமான அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மக்கள் நல உரிமை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு, காமராஜரின் உருவச் சிலைக்கு மலர் தூவி தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.
தொடர்ந்து அருணா தேவி ரமேஷ் பாண்டியன் பேசுகையில் “காமராஜர் வெறும் தலைவர் மட்டுமல்ல, அவர் ஒரு புரட்சியாளர். ஏழை எளிய மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்பதற்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், கல்விப் புரட்சிக்கு வித்திட்டது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவரது பிறந்தநாளில், அவர் கண்ட கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.