தூத்துக்குடி, ஜூலை 21, 2025: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சிலர் மனுக்களை அளித்து வருவதற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளரும், சமூக ஆர்வலருமாகிய அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இல்லையேல் மக்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு ஆலையை சீல் வைத்த பிறகும், சிலர் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி மனுக்கள் வழங்குவதற்காக மக்களைத் தூண்டிவிட்டு வருகின்றனர். இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்,” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளில் சில வழக்கறிஞர்கள் ஈடுபடுவதும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகச் செயல்படுவதும் வேதனை அளிப்பதாக அருணா தேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள், இச்செயலுக்குக் காரணமானவர்கள், மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக இன்று மனு கொடுக்க வந்தவர்கள் மீதும் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தப் பணிகளுக்குக் காரணமாக இருக்கும் ஆலை நிர்வாகத்தையும் கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்தச் சம்பவம் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் போராட்டம் வெடிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் எச்சரித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.