பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார்.
ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில், அமைச்சருடன் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்துடன் புறப்பட்ட இந்த ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாகப் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள அண்ணா சிலையை வந்தடைந்தது. அங்கு அண்ணா சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து உணர்வுப்பூர்வமாக மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
