மக்களின் அரை நூற்றாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 560 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்கள் வழங்கும் விழா உற்சாகமாக நடைபெற்றது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மாதா நகர், ஆனந்த் நகர், ஜேசு நகர், சமீர்வியாஸ் நகர், ஆரோக்கியபுரம் மற்றும் பாலதாண்டாயுத நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 560 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி தாளமுத்துநகர் சோனா மண்டபத்தில் நடைபெற்றது. வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., 560 பயனாளிகளுக்கும் இலவச பட்டாக்களை வழங்கிப் பேசுகையில்: “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் சிந்தித்து உழைத்து வருகிறார். அவர் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டமும் கடைகோடி மனிதனையும் சென்றடைகிறது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் 50 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கையை திமுக அரசு இன்று நிறைவேற்றியுள்ளது.”
தொடர்ந்து பேசிய அவர், “மகளிர் உரிமைத் தொகையைத் தடுக்க எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சதி செய்தனர். அந்தத் தடையை முறியடித்த முதலமைச்சர், 3 மாத நிலுவைத் தொகை 3,000 ரூபாயுடன், கோடைகால சிறப்புத் தொகுப்பாக 2,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயை மக்களின் வங்கிக் கணக்கில் ஏற்றியுள்ளார்.
அரசியலுக்கு வருகிறவர்கள் வெறும் அறிக்கைகளை மட்டுமே விடுகின்றனர். ஆனால், சொன்னதைச் செய்பவர் நம் முதலமைச்சர் மட்டுமே. தமிழகத்தில் மீண்டும் 7-வது முறையாக திமுக ஆட்சியும், 2-வது முறையாகத் தளபதியார் ஆட்சியும் அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.
