Site icon thoothukudipeople.com

காமராஜர் குறித்து அவதூறு: திருச்சி சிவா 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் – நாடார் சங்கம் எச்சரிக்கை!

காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா பத்து நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அனைத்து நாடார் சங்கங்களையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் ராஜகுமார் வெளியிட்ட அறிக்கையில், “பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் விளைவிக்குமாறு பேசிய MP திருச்சி சிவா-வை திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் அவர்களை குறித்து சில பொய்யான, தவறான தகவல்களை கூறியுள்ளார். இதற்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தகைய பேச்சு அனைத்து நாடார் சமுதாய மக்களையும் வெகுண்டெழச் செய்துள்ளது. பெருந்தலைவர் தனது அரசியல் பொதுவாழ்வில் எளிமையாய், நேர்மையாய், தூய்மையாய் வாழ்ந்து இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு, தியாகத்தின் திருவுருவமாக திகழ்ந்த மனிதப் புனிதர் ஆவார். மாபெரும் தலைவர்களை உருவாக்கி இந்திய திருநாட்டிற்கே வழிகாட்டியாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் ஏழைகளின் ஏந்தல், எளிமையின் சிகரம், நேர்மையின் நிறைகுடம், தியாகத்தின் திருவுருவம், கலியுகம் கண்ட கர்மவீரராக திகழ்ந்த பெருந்தலைவர் அவர்களை ஏ.சி. அறையில்லாமல் உறங்கமாட்டார் என திருச்சி சிவா கூறியது உண்மைக்கு புறம்பானதாகும். அதுவும் தான் மரணிக்கும்போது கலைஞர் கருணாநிதியிடம் தமிழகத்தை நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கலைஞர் தன்னிடம் கூறியதாக திருச்சி சிவா கூறுவது பொய்யும், புரட்டும், பித்தலாட்டமான பேச்சாகும்.
ஆண்டுகள் ஆக ஆக காமராஜரின் பெயரும், புகழும், செல்வாக்கும் வானுயர உயர்ந்து இன்று உலகெங்கிலும் ஓங்கி ஒலிக்கின்றது, ஒளிர்கின்றது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத திருச்சி சிவா போன்ற கோட்டான்களின் கூவலால் எக்காலத்திலும் களங்கம் கற்பிக்க முயல்வது அவரது அறியாமையையும், அரசியலில் தெளிவில்லாமையையும் காட்டுகின்றது. இதற்கு கண்டத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
திருச்சி சிவா தன்னுடைய தவறை உணர்ந்து வெறும் அறிக்கைகளை தவிர்த்து, தான் பேசியது தவறு என உணர்ந்து பகிரங்கமாக பத்து நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கம் சார்பில் அனைத்து நாடார் சங்கங்களையும் ஒன்றுதிரட்டி நாடார் சமுதாயத்தின் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தகவல்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள,
தூத்துக்குடி மக்கள் செய்திகள் WhatsApp சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்!
சேனலில் இணைய, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்:  https://whatsapp.com/channel/0029Va6ahuJ2UPBOuJiyLl46

Exit mobile version